யார் இவர்?

திரு. கே.என். சிவராமன் குறித்து திரு. மாலன் நாராயணன்

சிவராமனுடைய பெரிய பலம் என்பது அவருடைய பரந்துபட்ட வாசிப்பு. அவர் எல்லா வகையான நூல்களையும் வாசிக்கக் கூடியவர். அவற்றைக் குறித்து ஆழமான நினைவாற்றலும் உண்டு அவருக்கு.

அதைப்போல அவருடைய எழுத்துத் திறமையும் அலாதியானது. அவர் சரித்திரம் சார்ந்த, புராணம் சார்ந்த இலக்கியப் படைப்புகளை எழுதுவதானாலும் சரி அல்லது அறிவியல் புதினம் போன்ற நடையில் எழுதுவதானாலும் சரி அவரால் அவை இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியும்.

பரந்துபட்ட வாசிப்பு, பலவிதமான எழுத்துத் திறமை, அனைவரிடமும் இனிய முகத்துடன் பழகுவது, பெரும்பாலும் சண்டைகளையும் சர்ச்சைகளையும் தவிர்த்து விடுவது, கடின உழைப்பு, நினைவாற்றல் இவை எல்லாம்தான் அவரை பெரிய உயரத்துக்குக் கொண்டு சென்றுள்ளது.

அவர் ஒரு பெரிய பத்திரிகையாளராக மலர்வார் என்பதை நான் அன்றைக்கே அறிந்துகொண்டேன். நான் பணியாற்றிய குங்குமம் ஆசிரியர் குழுவில் அவர்தான் மிகவும் இளையவராக இருந்தார். Baby of the team. ஆனால் அன்றைக்கே அவர் மிகப் பெரிய பத்திரிகை ஆசிரியராக வருவதற்கு சாத்தியம்  என்று நம்பியிருந்தேன்.

என்னுடைய நம்பிக்கை, என் காலத்திலேயே, என் கண் எதிரிலேயே பலித்திருக்கிறது என்பதை காணும்போது எனக்கு தனிப்பட்ட மகிழ்ச்சி ஏற்படுகிறது. இன்னும் பல சாதனைகளை செய்வீர்கள் சிவராமன். உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்றும் உண்டு.


திரு. கே.என். சிவராமன் குறித்து 
திருமதி வேதா கோபாலன், திரு. எஸ். கோபாலன்


திருமதி. வேதா கோபாலன்

யாரை பற்றியும் யாரிடமும் தரக்குறைவாக விமர்சனம் செய்யாத குணம் -  சிவராமனுடைய பிளஸ் பாயிண்ட். ஒரு தகவலை சொல்லுதல், கேட்டல் என்ற அளவில்தான் அவருடைய கான்வர்சேஷன் இருக்கும். அதில் வம்பு இருக்காது.

மனிதநேயமிக்கவர். என்னுடைய கணவர் கோபாலன் 2002 ஆம் ஆண்டு விஜயா ஹாஸ்பிடலில் ஹார்ட் சர்ஜரிக்காக அட்மிட் செய்து, கொஞ்சம் காம்ப்ளிகேட் ஆகி 30 நாட்கள் மருத்துவமனையிலேயே இருந்தார். அப்போது பெரும்பாலான நாட்கள் சிவராமன் தான் ஒரு மகனைப் போல பகல் முழுவதும் அலுவலகத்தில் உழைத்துவிட்டு வந்து இரவு மருத்துவமனையில் அவருடன் தங்கி ஆறுதலாக இருந்தார்.

இவருடைய வீட்டில் மிக அழகான லைப்ரரி உண்டு. மிக அழகாக நேர்த்தியாக சப்ஜெக்ட் வாரியாக அடுக்கி வைக்கப்பட்ட புத்தகங்கள் நம்மை ஆச்சர்யப்படுத்தும். தெய்வீக ஆன்மிக நாட்டமும் உள்ளவர். எல்லோருடைய உணர்வுகளையும் மதிக்கக் கூடியவர்.

ஒரு விஷயத்தையும் எழுத ஆரம்பிப்பதற்கு முன் முழுமையாக பி.ஹெச்.டி செய்யும் அளவுக்கு ஆராய்ச்சி செய்துவிட்டுத்தான் தொடங்குவார் என்பதை நான் கவனித்திருக்கிறேன். என்னிடம் ஜாதகம் குறித்து சாதாரணமாக டிஸ்கஸ் செய்வார். அதை எங்காவது ஏதேனும் ஒரு இடத்தில் பயன்படுத்திவிடுவார்.

மனிதர்களை எடைபோடுவதற்கு சிவராமனை தட்டிக்கொள்ள ஆளில்லை. யார் எப்படி என்று அவ்வளவு ஈசியா யாரையும் எடைபோட மாட்டோம் நாங்கள் எங்கள் வயதுக்கு. ஆனால் சிவராமன் ‘அப்படி இல்லை…’ என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டுப் போய்விடுவார். சிவா ‘அப்படி இல்லை’ என்று சொன்னால் நாம் நிறையவே யோசிக்கணும்.

ஒருமுறை எங்களுக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் மாறிவிட்டதாக மிகவும் வருத்தப்பட்டு சிவராமனிடம் சொன்னபோது அவர் சொன்ன வாக்கியம் இன்றும் கல்வெட்டாய் எங்கள் மனதில் பதிந்துள்ளது.

‘நீங்களாகவே ஒன்றை புரிந்துகொண்டு அவங்க இப்ப மாறிட்டாங்க அப்படின்னா எப்படி… அவங்க எப்பவுமே அப்படித்தான்… நீங்கதான் முதல்ல அவங்கள சரியா புரிஞ்சிக்கலை… யாரும் மாறமாட்டாங்க… அவங்கள நீங்க லேட்டா புரிஞ்சுகொண்டீர்கள் அவ்வளவுதான்’ - எத்தனை பெரிய பக்குவப்பட்ட மனசு.

யாராவது பாராட்டினால் அதை காதால் கேட்டு நன்றி சொல்லிவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்போம் என்று நகர்ந்து விடுவதால் அந்தப் பாராட்டை போதையாக மனதுக்குள் ஏற்றிக்கொள்வது கிடையாது. இதுதான் சிவாவின் வெற்றிக்கு ஒரு காரணம்.

அதுபோல ஒருவருக்கு உதவி செய்யும்போதுகூட அதை தான் ஏதோ பெருமிதமாக செய்வதைப் போன்ற தோரணையில் இல்லாமல் எதிராளியிடம் இவர் உதவி கேட்கும் தோரணையில் பேசும் பண்பாடு இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய மற்றுமொரு குணம்.

திரு எஸ். கோபாலன் (புனைப்பெயர் பாமா கோபாலன்)

சிவராமன் நல்ல மனிதன். பேச்சு குறைவு. ஆனால் செயல்வீரர். 1998 ஆம் ஆண்டில் இருந்து குங்குமத்தில் பழக்கம். நானும் சப் எடிட்டர், அவரும் சப் எடிட்டர். எதிலும் நிதானம். எதையும் விரிவாக விளக்கமாக செய்யக்கூடியவர்.

அதன்பிறகு குமுதம் பக்தி ஸ்பெஷலில் நான் சப் எடிட்டராக சேர்ந்தேன். அவரும் அங்கு சப் எடிட்டராக வந்து சேர்ந்தார். அங்கு அவரது திறமை முழுவதையும் வெளிப்படுத்தினார். உதாரணத்துக்கு 10 ஐடியா கொடுத்து அதில் 4 செலெக்ட் ஆகி, 6 ரிஜெக்ட் ஆனால் அதுகுறித்து கவலைப் பட மாட்டார். அதை வேறுவிதமாகப் பயன்படுத்துவார்.

நல்ல கிரியேடிவ் பர்சனாலிட்டி. அவருக்கு முழு திருப்தி ஏற்படும் வரை கம்ப்யூட்டர் லே அவுட் ஆர்டிஸ்ட்டிடம் சொல்லி வேலையை முடிப்பார். மிகவும் பொறுமைசாலி.

குமுதத்தில் ஒன்றாகப் பணியாற்றிய போது நாம் சொல்லும் ஐடியாக்கள் நன்றாக இருந்தால் எடுத்துக்கொள்வார், இல்லை எனில் நாசூக்காகச் சொல்லுவார். யார் மனதையும் புண்படுத்த மாட்டார். வார்த்தைகளையே வீணாக்க மாட்டார்.

எழுதுவதில் அசாத்திய திறமை உண்டு. எந்த விஷயத்திலும் ஆழ்ந்த ஞானம் உள்ளவர்.

இவர் தன்னுடைய அம்மா, அப்பாவுடன் நாங்கள் இருக்கும் அப்பார்ட்மெண்ட்டில் எங்கள் ஃப்ளாட்டுக்கு மேலேயே குடிவந்தார்.

குமுதத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த சமயத்தில் எனக்கு கால் ஃப்ராக்ச்சர் ஆகி வீட்டில் இருந்தபடியே வேலை செய்துகொடுத்துவந்தேன். அப்போது தினமும் அலுவலகத்தில் இருந்து நேராக எங்கள் வீட்டுக்கு வந்து எப்படி இருக்கிறீர்கள், ஏதேனும் வாங்கி வரணுமா? என்றெல்லாம் கேட்டுவிட்டு அலுவலகத்தில் எனக்குத் தெரியப்படுத்த வேண்டிய செய்திகளை சொல்லிவிட்டுத்தான் அவர் வீட்டுக்குச் செல்வார். அந்த அளவுக்கு மனிதநேயம் மிக்கவர்.

இப்போது குங்குமத்தில் மிக உயரிய பதவியில் பணிபுரிகிறார். வாழ்க்கையில் இந்த உயரத்துக்கு இவர் வந்தது படிப்படியாக கடுமையான உழைப்பினால் மட்டுமே.

இனிவரும் காலத்தில் சாதனைகள் தொடரவும், உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியுடன் வாழவும்  எங்கள் இருவரின் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் சிவராமன்!

திரு. கே.என். சிவராமன் குறித்து திரு. யுவகிருஷ்ணா

பூர்விகம், திருச்சி. படித்ததும், வளர்ந்ததும் கோட்டை நகரமான வேலூர்.

எண்பதுகளின் தொடக்கத்தில் வடமாவட்ட எல்லைப் புறங்களில் நடந்த மாவோயிஸ்ட் வேட்டை, பல்லாயிரக்கணக்கான மக்களின் மனங்களில் நிரந்த வடுவாக பதிவாகியது. அதில் ஒருவர், பள்ளி மாணவர் கே.என்.சிவராமன். அந்த வயதிலேயே இச்சூழல் அவரை மார்க்சிய லெனினிய அரசியலின்பால் தாக்கத்துக்கு உள்ளாக்கியது.

மார்க்சிய சித்தாந்த நூல்கள் வாசிப்பின் காரணமாக மேலைநாட்டு தத்துவங்களின் பால் ஈர்க்கப்பட்டார். சித்தாந்தமும், தத்துவங்களும் அவரை இலக்கியத்துக்கு அழைத்துச் சென்றன. ஆரம்பத்தில் ருஷ்ய செவ்வியல் இலக்கியங்களில்தான் அவரது வாசிப்பு ஆர்வம் இருந்தது. பத்தாம் வகுப்பை முடிப்பதற்குள்ளாகவே அத்தனை ஐரோப்பிய கிளாசிக்குகளையும் வாசித்து முடித்து விட்டார். தமிழ் இலக்கியத்துறையில் பங்காற்றிக் கொண்டிருந்த கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் தேடித்தேடி சந்தித்தார். வேலூரில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தினார்.

மேலும் மேலும் வாசிப்பின் ருசிக்கும், பசிக்கும் தீனி போடவேண்டிய தமிழ் வெகுஜன வாசிப்புக்குள் நுழைந்தார். விளைவாக சாண்டில்யன், அவரது மானசீக ஆசான் ஆனார்.

இந்த காலக்கட்டத்தில் எழுத்து வாயிலாகவே சமூக சீர்த்திருத்தம் சாத்தியம் என்கிற முடிவுக்கு வந்திருந்தார். பத்திரிகைத்துறையில் பணியாற்றுவதின் மூலமாகவே சமூகத்துக்கு தன்னுடைய பங்களிப்பை வழங்கமுடியும் என்று திட்டவட்டமாக நம்பினார்.

ஆனால்-

பெற்றோரின் விருப்பம் வேறாக இருந்தது. மின்வாரியத்தில் பணிபுரிந்துக் கொண்டிருந்த அவரது தந்தை, தன்னுடைய ஒரே மகன் என்ஜினியரிங் பட்டதாரியாகி, வாழ்க்கையில் சுமூகமான பொருளாதார வசதிகளோடு வாழவேண்டும் என்று விரும்பினார்.

பெற்றோரின் விருப்பத்துக்காக instrumental engineering படித்தார்.

பட்டம் முடித்த கையோடு, ‘வேலை தேடுகிறேன்’ என்று சென்னைக்கு வந்தார். அவர் தேடிய வலை என்ஜினியரிங் துறையில் அல்ல.

‘பிலிமாலயா’ வல்லபனை சந்தித்து, மிக சொற்பமான சம்பளத்துக்கு ஒப்புக்கொண்டு பத்திரிகைத் துறையில் நுழைந்தார். ‘குங்குமம்’, ‘தினமலர்’, ‘குமுதம்’ என்று அவரது பணி விரிந்தது. சன் குழுமம், ‘தினகரன்’ நாளிதழை எடுத்து நடத்தத் தொடங்கியபோது அதில் இணைந்தார். ‘தினகரன்’ நாளிதழின் வார இதழ் இணைப்புகளுக்கு ஆசிரியராக திறம்பட பணியாற்றி, இப்போது ‘குங்குமம்’ வார இதழின் முதன்மை ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

சாண்டில்யனை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டவர் அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக ‘கர்ணனின் கவசம்’, ‘சகுனியின் தாயம்’, ‘விஜயனின் வில்’ என்று மூன்று தொடர்களை ‘குங்குமம்’ வார இதழில் எழுதினார். இத்தொடர்கள் மேற்கத்திய இலக்கிய தத்துவ உத்திகளை பயன்படுத்தி, தமிழ் வெகுஜன நடையில் எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ‘உயிர்ப்பாதை’ என்கிற சரித்திரத் தொடரை எழுதியிருக்கிறார். ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டை முன்னிட்டு ‘தினகரன் வசந்தம்’ இதழில் ஈராண்டுகளுக்கு ‘சிவந்த மண்’ என்கிற மார்க்ஸிய கோட்பாட்டு வகுப்பெடுக்கும் அரியப் பணியை தொடராக நிகழ்த்தினார்.

இவை தவிர்த்து பல நூறு சிறுகதைகளை சொந்தப் பெயரிலும், புனைப்பெயரிலும் பல்வேறு இதழ்களில் எழுதியிருக்கிறார்.

பத்திரிகையாளன் என்பவன் வழக்கமான பத்திரிகைப் பணிகளை தாண்டி எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்கிற சாவி, எஸ்.ஏ.பி காலத்து நம்பிக்கைகளில் இன்னும் உறுதியாக இருக்கும் வெகு அரிதான பத்திரிகையாளர்களில் இவரும் ஒருவர்.

No comments:

Post a Comment