சிமொன் தெ பொவ்வார் - The Nature of Second Sex - ஓர் அறிமுகம்


தவறுதான் இல்லையா?

ஒரு நூலை வாசிக்காமலேயே அந்நூல் குறித்த அறிமுகத்தை எழுத வந்திருக்கிறேன். அறியாமலேயே சிலர் மீது அதிகமான ஈடுபாடு வரும். எனக்கு சிமொன் தெ பொவ்வார் மீது. அதனாலேயே அவர் எழுதிய, இன்னமும் முழுமையாக வாசிக்காத, The Nature of Second Sex (LeDeuxieme Sexe ) நூல், இந்த இடுகைக்கான பொருளாகிறது.

சிமொன் தெ பொவ்வார் மீது ஈர்ப்பு வர என்ன காரணம்?

அவருக்கும் இருத்தலியல் தத்துவவாதியான சார்த்தருக்கும் இடையில் இருந்த காதலா அல்லது சார்த்தரின் உடனிருப்பு அன்பில் நனைந்தபடியே அமெரிக்காவில் வசித்த நெல்ஸன் அல்கிரெனின் தொலைதூரக் காதலிலும் குளித்ததா அல்லது அறிவு வீச்சுடன் மார்க்ஸ், எங்கல்ஸ், பிராய்ட், கிறிஸ்துவ ஆதித்தோற்றக் கதை, பிரபல இலக்கியவாதிகளின் பெண்வெறுப்புக் கருத்தியல் ஆகியவற்றையெல்லாம் தயங்காமல் பதிவு செய்ததா அல்லது தனது 37வது வயதில்
அவர் பிரெஞ்சு மொழியில் எழுதி வெளியிட்ட LeDeuxieme Sexe (The Nature of Second Sex) நூலா அல்லது சார்த்தருடன் பல விஷயங்களில் ஒன்றுபட்டவர், சில விஷயங்களில் அவரை எதிர்த்ததா அல்லது 50 ஆண்டுகள் யாருடன் லிவிங் டு கெதராக இணைந்து வாழ்ந்தாரோ அவரை (சார்த்தரை) ஆணாதிக்கவாதி என்று தயங்காமல் விமர்சித்ததா அல்லது இந்த விமர்சனத்தை சார்த்தர் ஏற்றதா...


எல்லாமும்தான்.

பல ஆண்டுகளாக படிக்கப்படாமலேயே என் புத்தக அடுக்கை நிரப்பும் புத்தகங்களில் ஒன்றாக The Nature of Second Sex (LeDeuxieme Sexe ) இருந்தது; இருக்கிறது. அவ்வப்போது எடுத்து புரட்டுவது, சில பக்கங்களை வாசிப்பது என்பதைத்தாண்டி வேறு எந்த மரியாதையையும் சிமோனுக்கு இதுவரை செய்ததில்லை.

ஆனால், கவிஞர் மாலதி மைத்ரியின் 'அணங்கு' சிற்றிதழில் இந்நூலை நண்பர் நாகரத்தினம் கிருஷ்ணா சிறிது சிறிதாக தமிழாக்கம் செய்து வந்ததை வாசிக்க ஆரம்பித்தப் பின், புத்தக அடுக்கிலிருந்து The Nature of Second Sex நூலுக்கு விடுதலை கிடைத்தது.

இந்நிலையில் 'எனி இந்தியன் பதிப்பகம்' சார்பில் நாகரத்தினம் கிருஷ்ணா எழுதியுள்ள 'சிமொன் தெ பொவ்வார்' வாசிக்கக் கிடைத்தது (இப்போது ‘எனி இந்தியன் பதிப்பகம்’ இல்லை. எனவே அச்சிடப்பட்ட இந்நூலின் பிரதிகள் அனைத்தும் விற்று விட்டதா அல்லது சில பிரதிகள் இன்னமும் இருக்கிறதா அல்லது இந்நூலை வேறு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறதா என்று தெரியாது. அறிந்தவர்கள் சொல்லவும்).

மொத்தம் 120 பக்கங்கள். விலை ரூ.70. ஆரம்பநிலை வாசகர்களுக்காக எழுதப்பட்ட நூல் இது. சிமொன் குறித்த சுருக்கமான அறிமுகத்துடன் The Nature of Second Sex நூலிலுள்ள முக்கியமான விஷயங்களையும் தமிழில் தந்திருக்கிறார் நாகரத்தினம் கிருஷ்ணா. இந்த இடுகைக்கு அச்சிறுநூல் முழுமையாக உதவியிருக்கிறது.

The Nature of Second Sex நூலை சிமொன் எழுத ஆரம்பித்ததற்குப் பின்னால் சார்த்தருடன் நடந்த உரையாடல் ஒன்று இருக்கிறது. சிமொனே அதை பதிவு செய்திருக்கிறார்.

‘‘ஒரு பெண்ணாக இருந்து நான் புரிந்துகொண்டதென்ன? எனது பெண் பிறவி குறித்த தாழ்வுணர்ச்சிகள் எனக்கில்லை. எனது பெண் தன்மையும் ஒருபோதும் எனக்கு இடையூறாக இருந்ததில்லை என்பதோடு, எனக்கு அதுவொரு பொருட்டே இல்லை என்பது போலத்தான் இளம் வயது கழிந்தது' என்று நான் சார்த்தரிடம் கூறினேன். அதற்கு அவர், 'இருக்கலாம்... ஆனாலும் உன்னை ஆண்பிள்ளையைப் போலவா வளர்த்திருக்கப் போகிறார்கள்? அந்த வகையிலாவது ஒரு பெண்ணுக்குள்ள பிரச்னைகளை அணுக வேண்டாமா?' என்றார்.

சட்டென்று எனக்கு ஒரு உண்மை புரிந்தது. இவ்வுலகம் ஆண்களுக்கான உலகமாக இருந்திருக்கிறது. எனது குழந்தைப் பருவம் ஆண்கள் போதித்த கட்டுக்கதைகளைக் கேட்டு வளர்ந்தது. ஒருவேளை ஆணாகப் பிறந்திருந்தால் எனது செயல்பாடுகளே வேறாக இருந்திருக்கலாம். யார் கண்டது. இனி வேறு பிரச்னைகளில் கவனம் செலுத்துவதில்லை என முடிவெடுத்து தீவிரமாக பெண்ணியத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்...'

சரி, The Nature of Second Sex நூலில் அப்படி என்ன இருக்கிறது?

மகாத்மா காந்தி சுடப்பட்டு மண்ணில் விழுந்த மறுவருடம் பிரெஞ்சில் LeDeuxieme Sexe (The Nature of Second Sex) நூலின் முதல் பாகம் வெளியானது. இந்த நூலுக்கு LeDeuxieme Sexe (The Nature of Second Sex) பெயரை அவர் வைக்க காரணமிருக்கிறது.

இந்த நூல் வெளிவந்த காலத்தில் பிரான்சில் பெண்ணுரிமை குறித்த புரிதல்கள் அவ்வளவாக இல்லை. ஏன் ஒன்றுமே இல்லையென்றும் சொல்லிவிடலாம். அதனால்தான் இந்தப் பெயரை சிமொன் தேர்ந்தெடுத்தார். உலகில் எப்போதுமே First Sex ஆக ஆண்கள் இருப்பதும், Second Sex ஆக பெண்கள் இருப்பதையும் குறிப்பால் உணர்த்துகிறார். இன்றுவரை இந்தநிலை நீடிக்கிறது என்பது வருத்தத்துக்குரிய விஷயம்.

இந்நூல் வெளியான முதல் வாரத்திலேயே 5 ஆயிரம் பிரதிகள் விற்பனையானதாக சொல்கிறார்கள். இந்நூலை ஆதரித்தும், எதிர்த்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன. போப் தலைமையிலான வாடிகன் அரசாங்கம் இந்நூலை தீண்டத்தகாத நூல் என்று அறிவித்தது. அன்று தொடங்கிய சர்ச்சை இன்று வரை தொடர்கிறது. காரணம், இந்நூலில் விவாதிக்கப்படும் விஷயங்கள் அப்படி.

அதில் மூன்று தலைப்புகளில் உரையாடப்படும் விஷயத்தை மட்டும் இந்த இடுகையில் சுருக்கமாக காண்போம்.

அதற்கு முன்னர் இருத்தலியல் சார்ந்த பல விஷயங்களும், அறிவியலின் ஆரம்பமும், உயிரியலின் தொடக்கநிலை ஆய்வுகளையும் கொண்டே இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்வது நல்லது. இருத்தலியல் சிந்தனைகள் இன்று காலாவதியாகிவிட்டன. அறிவியலும் உயிரியலும் அசுரவேகத்தில் வளர்ந்துக் கொண்டிருக்கின்றன.

என்றாலும் The Nature of Second Sex பலவிதங்களில் உயிர்ப்புடனேயே நம்முடன் இன்றும் உறவாடுகிறது. இரண்டாம் பாலினமாகத்தானே இப்போதும் பெண்கள் இருக்கிறார்கள்?

உயிரியலும் பெண்களும்

உடல் அமைப்பை வைத்து ஆண் பெண் பேதங்களை வகுப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இயற்கையைப் புரிந்துகொள்ளுதலும் அத்தனை எளிதானதல்ல. விலங்குகள், பறவைகளிலும் கூட இது ஆண், அது பெண் என்று எந்த ஒன்றையும் வெகு எளிதாக இனம் பிரித்துவிட பலநேரங்களில் இயல்வதில்லை. நிறம், புள்ளிகள், சிறகுகளின் வடிவம் ஆகியவற்றில் ஆணும் பெண்ணும் ஒன்றுபோலவே இருக்கும் உயிரினங்களுண்டு. வாய்ப்பு கிடைத்தால் ஒருவேளை வேறுபாடுகளை நாம் அறியக்கூடும். சிலநேரங்களில் ஆண் - பெண் இருவருக்குமான செயல்பாடுகளில் வேற்றுமைகளே இல்லை என்ற நிலையில் அவற்றைப் பிரித்து இனங்காண நம்மால் முடிவதில்லை. இதற்கு நல்ல உதாரணம் அமீபாக்கள்.

எனினும் பெண் உடலுக்கென்று அமைந்த இயற்கையான பரிணாம செயல்பாடுகளான பூப்படைதல், கருத்தரித்தல், குழந்தைப்பேறு ஆகிய சம்பவங்கள் பெண்களை வதைகளுக்கு உட்படுத்தியே நடந்துமுடிகின்றன. அம்மாதிரியான சிக்கல் மிகுந்த நேரங்களில், அவள் அவளாக இருப்பதில்லை. உயிரியல் கூறுகள் வம்புக்கு இழுத்து சண்டைப்பிடிக்கின்றபோது, பெண்ணால் தப்பிக்க முடிவதில்லை. நிகழ்வின்போது தனது இருப்பை இழந்து அவளிடமிருந்தே அவள் அந்நியப்படவேண்டியிருக்கிறது.

எப்போது பூப்படைகிறாளோ அப்போதே அவளுக்கான சோதனைக்காலம் தொடங்கிவிடுகிறது. அவள் விதியை அவள் தீர்மானிப்பதில்லை. தனக்கு எதிராக நடத்தப்படுகிற யுத்தத்தில் அவள் கையுறுநிலையில் இருப்பது வெளிப்படை. பூப்படையும் தருணம் கொடியதெனில், அதனின்று விடுதலை பெற சம்பவிக்கும் மாதவிடாய்த் தருணமும், மாதவிடாயிலிருந்து விடுதலைப் பெறும் நிகழ்வும் ஆகக் கொடியது.

ஒரு பெண்ணுடலுக்குண்டான பரிணாமச் செயல்பாடுகள் ஆணுடைய உடலுக்கும் உண்டு. எனினும் அங்கே வதைகளில்லை, சேதங்களில்லை.

ஒர் ஆணைக்காட்டிலும் பெண் என்பவள் பொதுவாகச் சிறியவள். எடையில் குறைந்தும், மெலிந்த எலும்புகளுக்கு சொந்தக்காரியாகவும் இருக்கிறாள். பெண்ணின் எல்லா உறுப்புகளும் வலுவற்ற தன்மையுடன் இருக்கின்றன. மாதவிடாய்க் காலங்களிலும், பேறு காலங்களிலும் அதிக அளவில் கால்சியம் உப்பு பெண்ணுடலிலிருந்து வெளியேறுவதே இதற்கு காரணம்.

பெண்ணின் உட்சுரப்பிகளில் (endocrine) ஏற்படும் ஒழுங்கின்மை, நரம்பு மண்டலத்தையும், சுவாச மண்டலத்தையும் பாதிக்கிறது. தசை மற்றும் நரம்புகளின் கட்டுப்பாட்டில் குழப்பம் ஏற்படுகிறது. பெண்கள் உணர்ச்சி வசப்படுகிறார்கள். இம்மாற்றத்தினை ரத்தநாளங்களிலும் உணருகிறோம். இதயம் வேகமாகத் துடிக்கிறது. முகம் சிவந்துபோகிறது. இது தொடர்பான இதர விளைவுகளிடம் இருந்தும் பெண்கள் தப்புவதில்லை. கண்ணீர் சிந்துவது, பைத்தியக்காரிபோலச் சிரிப்பது, வலிப்புநோய்க்குப் பலியாவதென பெண்ணை ஒரு நலிந்த உயிராகச் சித்தரிப்பது ஒருபோதும் அவளே அல்ல. அவள் உடலில் இருக்கும் நாளமில்லா சுரப்பிகளே இதற்கெல்லாம் காரணம்.

பாலூட்டி இனங்களில் முற்றாக தனது உடல்மீதான உரிமையை இழப்பவளும், அந்த இழப்புக்கு எதிராக யுத்தத்தில் இறங்குவதும் பெண்ணே. வேறெந்த அடிமை முறையிலும், இனப்பெருக்க நிகழ்வு இந்த அளவுக்கு கோலோச்சுவதோ, அதன் செயல்பாடுகளை மிகுந்த மனவேதனைகளுடன் ஏற்றுக் கொள்வதோ இல்லை.

ஆக, பெண்ணின் விதியை அவள் தீர்மானிப்பதில்லை. உயிரியல் கட்டமைப்பே தீர்மானிக்கிறது...

உளவியலும் பெண்களும்

‘ஓர் ஆணுக்கும் பெண்ணுக்குமான விதியை தீர்மானிப்பது அவர்கள் பிறப்பு தொடங்கி இளமை வரைக்குமான அவன் அல்லது அவள் பிறப்புறுப்பு, அதன் வளர்ச்சி சம்பந்தப்பட்டதென்றும், அதுவே அவன் அல்லது அவளின் நனவிலித் தன்மைக்குக் காரணம்' என்றும் சொல்கிற உளவியல் சிந்தனையை (குறிப்பாக பிராய்ட்) சிமொன் நிராகரிக்கிறார்.

பிராய்டுடைய சிந்தனை ஆண் இனத்தை முன்மாதிரியாகக் கொண்டு சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார்.

'இன்றைக்குப் பெரும்பாலான உளப்பகுப்பாய்வாளர்கள், பெண் குழந்தைக்கு ஆண்குறி இல்லை என்ற ஏக்கம் உண்டு என்பதை ஏற்கிறபோதிலும், அது வெட்டப்பட்டுவிட்டது என்கிற கவலைகள் ஏதும் அவளுக்கு கிடையாது என்கிறார்கள். தவிர இந்த ஏக்கத்தைக்கூட எல்லா பெண்களுக்கும் பொதுவானதாக சொல்ல முடியாது. இரு உடல்களையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள், வருந்துகிறார்கள் என்றெல்லாம் போகிறபோக்கில் சொல்வது சரியாகாது.

பெரும்பாலான சிறுமிகள் சரீர அமைப்பின் பேதத்தைக் காலம் கடந்தே புரிந்துகொள்கிறார்கள். இப்புரிதலே கூட கண்ணால் பார்த்துப் புரிந்துகொண்டது அவ்வளவுதான். பையன்களுக்குத் தங்கள் ஆண்குறியிலிருந்து உயிர்ப்புள்ள ஓர் அனுபவம் கிடைக்கிறது. அதன்காரணமாக ஆண்குறி மீது பெருமிதமும் ஏற்படுகிறது.

ஓர் ஆண்குறியினைப் பற்றிய பெண்ணின் ஆரம்பபுரிதல் என்பது வெளித்தோற்றம் சார்ந்தது. எனவே அக்குறி சார்ந்த பையன்களின் பெருமிதம் எவ்விதத்திலும் சிறுமிகளிடம் தாங்கள் சிறுமைப்பட்டிருக்கிறோம் என்கிற உணர்வை ஏற்படுத்திவிடாது. அற்பமானதொரு சதைத்தண்டு போல முன்புறம் வளைந்திருக்கும் ஆண்குறி, பெண்குறியினும் பார்க்க தோற்றத்தில் மாறுபட்டிருக்கிறது என அவள் நினைக்கலாம். ஏன் அருவருப்பும் கொள்ளலாம்.

பெண்ணுக்கே உரித்தான பாலுணர்ச்சி உந்துதலை ஆதாரமாகக் கொள்ளத்தவறியதால், எலக்ட்ரா சிக்கல்கள் (ஈடிப்பஸ் சிக்கலுக்கு எதிர்பதம். சிறுமி தன்னை தாய் உடலாக பாவித்து தந்தையை கவர நினைப்பது ) குறித்து பிராய்ட் தரும் விளக்கத்தில் தெளிவில்லை. பையன்களில் கூட அனைவருக்குமே ஈடிப்பஸ் சிக்கல் (தன்னை தந்தையாக பாவித்து தாயை கவர நினைப்பது) வருமென்று சொல்ல முடியாது.

புணர்ச்சி செயல்பாடுகளில் பெண்ணுக்கு வழங்கப்படும் இடமும் கூட அவளது மனக்குறையைக் கூட்ட உதவுகிறதே தவிர, குறைக்க உதவுவதில்லை. அவளுக்கு இழைக்கப்படுகிற சிறுமைகளிலிருந்து மீள்வதற்கே ஆண்தன்மையதான எதிர்ப்பினை (Masculine protest) மேற்கொள்ளவும், தன்னை ஆணாகக் கற்பிதம் செய்து பெண்ணுக்குரிய ஆயுதங்களேந்தி ஆணுக்கு எதிராகப் போராடவும் பெண் முனைகிறாள்...'

இந்த இடத்தில் ஆண்தன்மைக்கும் (Viriloid ) பெண்தன்மைக்கும் (Feminine) இடையே ஒரு பெண்ணிடத்தில் ஏற்படும் யுத்தங்களையும் சிமொன் மறக்கவில்லை என்பதை குறிப்பிட்டாக வேண்டும். அவை அவளுடைய இக்கட்டான நிலைமைக்குக் காரணங்கள் என்பது அவரது முடிவு.

'ஒரு பெண்ணுக்கு ஆண்தன்மை சார்ந்த பிரச்னைகள் பிறப்புறுப்பு மூலத்தில் எழுவது... பெண்தன்மை பிரச்னைகள் யோனி மடலில் எழுவது... குழந்தைப்பருவத்தில் தன்னைத் தந்தையாகப் பாவிப்பது... பின்னர் ஆணோடு ஒப்பிடுகிறபோது, தான் குறைபாடுகொண்டவள் என்ற எண்ணம்...

ஒருபக்கம் ஆணுக்கு நிகரென்று நினைத்திருக்க, மற்றொரு பக்கம், அவனைக்காட்டிலும் தாழ்ந்தவள் என்கிற மனவேதனை - ஆண்மையியம் கொண்டவள் என்று தலைநிமிர்வது ஒருபுறம், அவனோடு ஒப்பிட்டு இயல்பான பெண்மையியத்தின் அடிப்படையில் சொல்லொணா மன உளைச்சல்களோடு தலைகுனிவது மறுபுறம்.

எனவே இரண்டாம் நிலையிலிருந்து விடுபட காதல்வயப்படுகிறாள். வேறொரு ஆணைத் தேடுகிறாள். காதலன், கணவன் எவராக வேண்டுமானாலும் இருக்கலாம். அது ஒன்றுத்தான் தந்தையிடம் அவள் கொண்டிருக்கும் தகாப்புணர்ச்சி நோய்க்கான சிகிச்சை, மாற்றுவழி. அவள் பாலியல் வேட்கை, விருப்பம் சார்ந்தது என்பது தெளிவு. அதற்கான பலன் தாய்மைப்பேறில் கிடைக்கிறது. ஒருவகையான சுதந்திரம் என அதை கருதலாம். இந்நிகழ்வு அவளுடைய சொந்த முயற்சி, சுயபலம் சார்ந்தது. அந்நிகழ்வு பல விபத்துகளைக் கொண்டது. அந்த விபத்தில் மோசமாகச் சேதமுறுவது அவளே என்பதை அறிந்திருந்தும், ஒவ்வொரு பெண்ணும் எதிர்ப்பின்றி தாய்மைக்கும் அது சார்ந்த நிகழ்வுகளுக்கும் உட்படுகிறாள்...'

பொருள்முதல்வாதமும் பெண்களும்

பெண்கள் குறித்த உளவியல் சிந்தனைகள்மீது தமது கடுமையான கண்டனங்களை வைத்த சிமொன், பொருள்முதல்வாத சிந்தனைகள் மீது அதிகமாக தாக்குதல்களை கொடுக்கவில்லை. பொருள்முதல்வாத சிந்தனையாளர்கள், சிமொன் போல இடதுசாரி சிந்தனையாளர்களாக இருந்தது இதற்கு காரணமாக இருக்கலாம். தவிர, எங்கெல்ஸ், பெபெல் ஆகிய இருவருமே பெண்விடுதலைக்கு உழைத்தவர்கள் என்பதையும், பெண்கள் நிலைகுறித்து அக்கறை காட்டியவர்கள் என்பதையும் நினைவில் கொள்வது நல்லது.

'இப்போதைக்கு அதைப்பற்றி விவரிக்க நம்மிடம் போதிய ஆதாரங்கள் இல்லை' என்று 'குடும்பத்தின் தோற்றம்' நூலில் எங்கெல்ஸ் ஒப்புக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டும் சிமொன், அதேநேரத்தில் 'குழு உடமையிலிருந்து தனியுடமைச் சமூகம் தோன்றியது' என்பதை உரியமுறையில் எங்கெல்ஸ் விளக்கத் தவறிவிட்டார் என்கிறார்.

'தனியுடமை அமைப்பில் பெண்கள் அடிமைகளாகத்தான் மாறிப்போவார்கள் என்று சொல்லமுடியாது' என்பது சிமொனின் வாதம். அதேபோல் எங்கெல்ஸ் சொல்லியுள்ள நிலத்தின் மீதான ஆண்களின் காதலைப் பற்றியும் அவருக்கு ஐயமிருக்கிறது. நில உடமைப் பற்றாளர்களாக ஆண்கள் மாறியது எப்படி, அதற்கான காரணங்கள் என்ன, சமூக அமைப்புக்கென தனிப்பட்ட காரணங்கள் இருக்க முடியுமா என எதிர்வினை ஆற்றுகிற சிமொன், அதற்கான தமது பதிலையும் கூறுகிறார். அவரைப் பொருத்தவரை இப்பிரச்னை பொருள்முதல்வாதத்துக்கு அப்பாற்பட்டது. இந்த இடத்தில் உயிரியின் வாழ்வியல் சூழல்களை நன்கு புரிந்துகொண்டால் மட்டுமே சிமொன் சொல்ல வருவதை முழுமையாக புரிந்து கொள்ள முடியும்.

'தான் தனித்தவன் என்பதை உணரும் கர்த்தா (சப்ஜெக்ட்) தனது சுதந்திரத்துக்காகக் கூட்டத்திலிருந்து விலகி தனது அடையாளத்தை சொத்துடமை மூலம் நிரூபிப்பதே தனியுடமைக்கு வழி வகுத்திருக்கும்' என சிமொன் உறுதிப்பட விவரிக்கிறார்.

தொழில்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்துக்குப் பிறகும் பெண்கள் ஒடுக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். எங்கெல்ஸ் கருத்துப்படி இது நடக்கக் கூடாது. எனினும் நடக்கிறது. எப்போதும் பிறருடன் சுமுகமாக வாழ்வதைக் காட்டிலும் அடிமைப்படுத்தி வாழவிரும்பும் எதேச்சதிகார மனித மனமே இதற்கெல்லாம் காரணம் என்பதை சிமொனின் வார்த்தைகள் வழியே நாம் புரிந்து கொள்ளலாம்.

'ஏழைக்குடியானவர்களும் பெண்களும் ஒன்றல்ல. ஆண் - பெண் பேதத்தை வர்க்கங்களுக்கு இடையேயான பிரச்னைகளாக பார்க்கக் கூடாது. ஆண்களும் பெண்களும் ஒன்றாக வாழ்வது மட்டுமல்ல, அவர்களுக்கென்று பொதுவான பிரச்னைகளும் இருக்கின்றன. ஆண்களை ஒழிக்க வேண்டுமென பெண்கள் நினைப்பதுமில்லை, அவர்களுக்கென்றே இருக்கும் அடையாளத்தை இழக்க விரும்புவதுமில்லை. இதை வர்க்கப் போராட்டத்தில் காணமுடியாது. பாலுணர்வே ஆணையும், பெண்ணையும் சேர்த்து வைக்கிறது. பெண் ஒரு உற்பத்தியாளர் மட்டுமல்ல என்பதையும், பாலினத்தின் அடையாளம் என்பதையும் மறந்து பொருளியல்வாத அடிப்படையில் மாத்திரம் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைப் பார்க்கக் கூடாது...'

----------

சிமொனின் இந்த நூலை வாசிக்கும்போது ஏனோ தந்தை பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள்? நூலின் பக்கங்கள் வீச்சு முகத்தில் வந்து அறைகிறது. 1933ம் வருடத்திலேயே எவ்வளவு அழுத்தமாக பெண்களின் விடுதலை குறித்து பெரியார் பேசியிருக்கிறார் - எழுதியிருக்கிறார்?


No comments:

Post a Comment