திணைகளின் பெருவெளி!

மிகையில்லை. எந்நேரமும் வியப்பதுதிணைக் கோட்பாட்டைவடிவமைத்த முன்னோர்கள் குறித்துதான். உலகில் வேறெந்த மொழியிலும் இல்லாத அதிசயம் இது.
மனிதர்களின் வாழ்க்கையை, வாழ்வியலை, அவர்களது உணவை, பொருளாதார இயக்கத்தை, அது சார்ந்த மொழி கட்டமைப்பை, உடையை, கலையை... இன்னும் என்னவெல்லாம் இருக்கிறதோ அவை அனைத்தையும் உள்ளடக்கியதுதிணைமட்டுமே.
மறுக்கவில்லை. பல காலகட்டங்களைக் கடந்து இன்று நவீன உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
மலையும் மலை சார்ந்த இடங்களும் அல்லது கடலும் கடல் சார்ந்த இடங்களும் அல்லது காடும் காடு சார்ந்த இடங்களும் அல்லது வேளாண்மையும் வேளாண்மை சார்ந்த இடங்களும் அல்லது பாலைவனமும் பாலைவனம் சார்ந்த இடங்களும் என துல்லியமாக ஒரு இன்ச் நிலத்தைக் கூட இன்று வரையறுக்க முடியாதுதான். ஐந்திணையும் ஐம்பூதங்களிலும் இரண்டற கலந்திருக்கிறதுதான்.
என்றாலும்திணைஅழியவில்லை. வேறொன்றாக மாறியிருக்கிறது. வளர்ந்திருக்கிறது. நிறைந்திருக்கிறது. சென்னை மாநகரமாகவும் காட்சியளிக்கிறது!
இந்த காரணத்தினால்தான்சென்னை சிறுகதைப் போட்டிக்கு நடுவராக இருக்க முடியுமா எனகிழக்கு பதிப்பகத்தில்இருந்து கேட்டதும் மறுக்கத் தோன்றவில்லை.
தமிழகத்தின் வேறு எந்த நகரத்துக்கும் இல்லாத பல சிறப்புகள் சென்னை மாநகர நிலத்துக்கு உண்டு.
அதில் பிரதானமானது திணை.
ஆயிரம் ஆண்டு வரலாறு கொண்ட இப்பிரதேசத்தில் ஆணிவேரை தொலைத்த மரங்கள் பட்டுப் போனபடி நடமாடிக் கொண்டிருக்கின்றன. இது புலம் பெயர்ந்தவரின் நகரம். வந்தேறிகளின் வாழ்விடம். பூர்வக்குடிகளை அடித்து விரட்டி நூற்றாண்டாகிறது. இந்தியாவிலுள்ள மூன்று பெரிய துறைமுக நகரங்களுள் ஒன்று. தமிழகத்தின் தலைநகரம். இத்யாதி, இத்யாதி என்பதான பிம்பத்தின் பின்னால் கணக்கிலடங்கா திணைகள்  மிதக்கின்றன.
மெரினாவும் இருக்கிறது. கூவமும் ஓடுகிறது. அண்ணா சாலையும், ஈஸிஆர் ரோடும், ராஜீவ் காந்தி சாலையும் இருப்பது போலவே பிராட்வேக்களும் நிரம்பி வழிகின்றன. கோடம்பாக்கமும் உண்டு. கொளத்தூரும் உண்டு. போட் கிளப்பும் உண்டு. புளியந் தோப்புகள், கூவம் கரை ஆகியவற்றில் சேரியும் உண்டு.
உயர் நடுத்தர வர்க்கங்கள் வாழும் அண்ணா நகரும், அடையாரும் இருப்பது போலவே நடுத்தர வர்க்கங்கள் ஒண்டுக் குடித்தனங்களில் மூச்சுத் திணறும் திருவல்லிக்கேணியும், சைதாப்பேட்டையும் உண்டு. அக்ரகாரங்கள் மாம்பலம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, குரோம்பேட்டை ராதாநகரில் செருகப்பட்டுள்ளது போலவே நிழல் உலக மனிதர்கள் வாழும் தண்டையார்பேட்டைகளும், புதுப்பேட்டைகளும் செருகப்பட்டுள்ளன.
குஜராத்திகளும், மார்வாடிகளும் சவுகார்பேட்டையில் சங்கமமாகியிருப்பது போலவே முகமதியர்களும், கிறிஸ்தவர்களும், இந்துக்களும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்.
கனவுத் தொழிற்சாலையான கோடம்பாக்கமும், சாலிக்கிராமமும், வளசரவாக்கமும் இருப்பது போலவே, கனரக தொழிற்சாலைகளான அம்பத்தூர் உள்ளிட்ட தொழிற்பேட்டைகளும், இன்றைய தொழில்நுட்ப உச்சமான டைடல் பார்க்கும் கண் சிமிட்டுகின்றன.
நாடார் கடைகளும், வன்னியர் தெருக்களும், சேட்டன்களின் டீ கடைகளும் மாநகரத்தின் எல்லா சந்து பொந்துகளிலும் இருப்பது போலவே, மொபைல் ஷோ ரூம்களும், ரெடிமேட் துணிக்கடைகளும், நகைக் கடைகளும் நம்மை அன்புடன் வரவேற்கின்றன.
மின்சார வயருக்கு சமமாக, கேபிள் ஒயர்கள் ஓடுவது போலவே அனைத்து சுவர்களிலும் ஒட்டப்படும் போஸ்டர்களில் பிரபஞ்சத்திலுள்ள அத்தனை வகையான பெண்களின் மார்பகங்களும் பிதுங்கி வழிகின்றன.
சைக்கிளும் சாலைகளில் செல்கின்றன. பென்ஸ் காரும் பறக்கின்றன. காபி 15 ரூபாய்க்கும் கிடைக்கிறது, ஐநூறு ரூபாய்க்கும் கிடைக்கிறது. அண்ணாச்சியே சூப்பர் மார்கெட்டும் நடத்துகிறார். திரிசூல மலையையே குழந்தைகள் தங்கள் முதுகில் சுமந்து செல்வதால், அம்மலையை வெடி வைத்து தகர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
பேய் மழை பெய்தாலும் வீடுகள் மிதக்கின்றன. சின்ன தூறல் விழுந்தாலும் வீட்டினுள் ஒழுகுகின்றன.
டிசம்பர் மாதம் சாஸ்த்ரிய சங்கீத சபாக்கள் ஆரோகணம் பாடுவது போலவே ஜாஸும், ராப்பும் அவரோகணம் இசைக்கின்றன. அமெச்சூர் நாடகங்கள் நான்கு சுவற்றுக்குள் கிச்சுகிச்சு மூட்டுவது ஒருபக்கம் என்றால், நவீன நாடகங்கள் தெருக்களில் உயிர்வாழ்வது இன்னொரு பக்கம்.
நல்ல காதல், கெட்ட காதல், கள்ளக் காதல் என்றெல்லாம் காதலில் இருக்கிறதா என ஓயாமல் அலைகள் ஆராய்ந்துக் கொண்டிருக்க... சூரியன் அஸ்தமித்ததும் கடற்கரையின் மறைவான இடங்களில் ஜோடி ஜோடியாக எழுப்புதல் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சேவல் பண்ணைகளின் கழிவறைகளிலும், குளியலறைகளிலும், சாக்கடைகளிலும் பலகோடி உயிர்கள் தினமும் மரணிக்கின்றன.
பறக்கும் இருசக்கர வாகனங்களின் பின்னிருக்கைகள் புட்டங்களை நிரப்பும்போதே அர்த்தம் பெருகுகின்றன. மனம் சார்ந்த காமத்தை நியான் விளக்குகள் அழித்துவிட்டன. உலகம் சுருங்கிவிட்டதுக்கு அடையாளமாக, மெக்ஸிகோவில் இருக்கும் அழகியை கூடுவாஞ்சேரியில் இருந்தபடியே புணர முடிவதன் மூலம் அறிய முடிகிறது.
ஆண்களின் எழுச்சியையும், பெண்களின் நெகிழ்ச்சியையும் பிம்பங்களும், செயற்கை சாதனங்களும் தீர்மானிக்க ஆரம்பித்து பல மாமாங்களாகின்றன. இல்லாத உருவங்களை மனதில் இருத்தி, அகப்படும் தசைகளுடன் இணையும் தந்திரத்தை அனைவருமே கற்றிருக்கிறார்கள்.
பேருந்தில் ஏறி இறங்கும் நேரத்தில் காதல் மலர்ந்து, உடல்கள் இணைந்து, பெரு வெடிப்பாய் காமம் சிதறுகின்றன. அலறும் செல்ஃபோன்களில் கடன் வாங்கச் சொல்லி கிளிகள் கொஞ்சுவது போலவே கடனட்டைக்கு பணம் கட்டச் சொல்லி காண்டாமிருகங்கள் உறுமவும் செய்கின்றன.
சென்னையின் மக்கள் தொகையை எண்ண முடிந்தாலும் காற்றில் பிடிப்பில்லாமல் மிதக்கும் கனவுகளை எண்ண முடியாது போலிருக்கிறது. நம்பிக்கை, அவநம்பிக்கை, லட்சியம், சோர்வு, இயலாமை, அந்நியமாதல், மனம் பிறழ்தல், பக்தியில் திளைத்தல், தற்கொலை செய்து கொள்ளுதல், விபத்தில் கை - கால்களை இழத்தல்...
புல்லாகி, புழுவாகி, மரமாகி, பல் மிருகமாகி, பறவையாய், பாம்பாய் உருமாறி, உருமாற்றி அனைத்தையும் ஜீரணித்தபடி சென்னை வளர்ந்துக் கொண்டே இருக்கிறது. திக்குத் தெரியாத காட்டில் வட்டமென தெரியாமல் மனிதர்கள் ஓடிக்க்க்க்க்கொண்டே இருக்கிறார்கள். ரத்தம் கக்கி இறப்பவர்களின் சடலங்களை சீந்தவும் ஆளில்லை.
இது சென்னையா அல்லது இதுதான் சென்னையா அல்லது இதுவும் சென்னையா அல்லது இதுவே சென்னையா?
நரகமா? சொர்க்கமா? திரிசங்கா?
விடைகளுக்கான பாதையை சர்வநிச்சயமாகதிணைதான் சுட்டிக் காட்டுகிறது.
எனவேதான் புதுமைப்பித்தனில் ஆரம்பித்து பலரும் சென்னை வாழ்க்கையை சிறுகதையில் பதிவு செய்திருக்கிறார்கள். அதிலுள்ள உயிரையும், பிணத்தையும் உணர வைத்திருக்கிறார்கள்.
இப்படி அணுகி, உருகி, விலகி, சிறுகதை எழுதியவர்களில் சென்னையை பூர்வீகமாக (?) கொண்டவர்களும், வாழிடமாகக் கொண்டவர்களும், பிழைக்க வந்தவர்களும் அடக்கம்.
அனைவரது கதைகளிலும் சென்னையின் வெக்கையும், வாசனையும், துரோகமும், வன்மமும், அன்பும் இருப்பதாகவே நம்புகிறேன். சகலத்திலும்திணையின் வாசனை தூக்கலாக இருப்பதாகவே நுகர்கிறேன்.
அவற்றை சுவாசிக்கும் முயற்சியில் ஒன்றாகவேசென்னை சிறுகதைப் போட்டிஅமைந்திருக்கிறது. ஏனெனில் சென்னைக்கான கதைகளை சென்னை மட்டும்தான்  பிரசவிக்கிறது.
யோசித்துப் பாருங்கள். அசோகமித்திரனின்தண்ணீர்’; ‘கரைந்த நிழல்கள்உள்ளிட்ட நாவல்களும் சரி... அவரது எண்ணற்ற சிறுகதைகளும் சரி... அவற்றை வேறொரு நிலத்தில் நட முடியுமா? நட்டால்தான் அவை வளருமா?
எல்லாமே கதைகள்தான். அனைத்தின் அடிநாதமும் உறவுச் சிக்கல்களும், காதலும், துரோகமும், வன்முறையும்தான்.
என்றாலும், வண்ணநிலவனின்எஸ்தர்’, திருவல்லிக்கேணியில் வாழமாட்டார். இங்கும் கடல் இருக்கிறது என்பதற்காககடல்புரத்தில்நாவலை காசிமேட்டை பின்னணியாக வைத்து எழுதிவிட முடியாது. ‘இதுக்குத்தானா..? ஆமா. இதுக்குத்தான்...’ என எல்லா ஊர்களிலும் பாபுவிடம் யமுனா கேட்டுக் கொண்டுதான் இருக்கிறாள். ஆனால், கும்பகோணத்தில் ஆரம்பித்து சென்னையில் முடிந்ததால்தான் அதுமோக முள்’.
.பிச்சமூர்த்தியின்ஜம்பரும் வேஷ்டியும்' சிறுகதையும் சரி... கு..ராஜகோபாலனின்ஆற்றாமை'யும் சரி... கு.அழகிரிசாமியின்காற்றும்சரி... 1940 - 50 - 60களின் சென்னைக்கு மட்டுமே உரிய ஒண்டுக்குடித்தனதிணைஎச்சம். இவற்றை ஒருபோதும் தாமிரபரணி ஓரம் எழுத முடியாது.
ஏனெனில் கதை மாந்தர்களின் மனநிலையை தீர்மானிப்பது அகக் காரணங்கள் மட்டுமல்ல. அகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் புறச்சூழல்களே உறவுக்கும் பிரிவுக்கும் துரோகத்துக்கும் வேராகின்றன. இந்த புறச்சூழலை சந்தேகத்துக்கு இடமின்றி வடிவமைப்பது நிலங்களும் அந்நிலம் சார்ந்த பொருளாதார இயக்கங்களும்தான்.
அதனாலேயே சென்னை திணைகளை வரிசைப்படுத்துகிறது. சேர்க்கிறது. பிரிக்கிறது. கலக்கிறது. ஒன்றை பலவாறாக காலம்தோறும் மாற்றுகிறது. மாற்றியபடியே மாநகரமாகிறது.
இல்லாவிட்டால்மவுண்ட் ரோடுபுதுமைப்பித்தனுக்குமகாமசானமாக' தெரிந்திருக்காது. ஒரு கிழவனின் மரணத்தை ஒரு குழந்தையைப் போல வேடிக்கைப் பார்த்திருக்காது.
ஆனால், பாருங்கள்... இதே சாலைதான் சுஜாதாவுக்குஅண்ணாசாலை 2094' ஆக தெரிந்திருக்கிறது! அனுமதி வாங்கி நுழையத்தக்க அற்புத சாலையாக காட்சியளித்திருக்கிறது!
இது முரண் மட்டுமல்ல. இதுவேதான் சென்னையின் வரலாறும்.
அதனாலேயே சென்னையை மையமாக வைத்து எழுதப்படும் சிறுகதைகள் காலவெள்ளத்தில் கல்வெட்டாக மாறுகின்றன. அந்தந்த காலகட்டத்தின் ஆவணமாக பரிணமிக்கின்றன.
1970களில் அடித்தட்டு மார்வாடிகள் இந்த மாநகரத்தில் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை திலீப்குமாரின்தீர்வுசிறுகதைதானே பொட்டில் அறைந்து புரிய வைக்கிறது?
மனையடி சாஸ்திரம் தெரிந்த, அனுபவப்பூர்வமாக நிலத்தின் சூட்சுமத்தை உணர்ந்த கொத்தனார், பிழைப்புத் தேடி சென்னைக்கு வந்து, ஏட்டுச் சுரக்காய் இன்ஜினியரிடம் படும் அவஸ்தைகளையும் அதுசார்ந்த சிக்கல்களையும் உணர வேண்டுமானால் கோணங்கியின்மாயாண்டி கொத்தனின் ரஸமட்டம்' சிறுகதையை படிப்பதுதானே ஒரே வழி?
ஐந்திணை என வகுத்தது சங்ககாலம். அதுவே ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட திணைகளாக உருமாறியிருப்பதை பூதக்கண்ணாடி இல்லாமலேயே விளக்குவது சென்னைக் காலம்.
இந்த நிலத்துக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். எப்படி வேண்டுமானாலும் பிழைக்கலாம். அமைப்பு சார்ந்த வேலைகளுக்கு சமமாக அமைப்புசாரா பணிகளும் இங்குண்டு.
மாதத் தவணைகளில் மூச்சுத் திணறுபவர்களுக்கு மத்தியில் காலையில் வட்டிக்குப் பணம் வாங்கி வியாபாரம் செய்துவிட்டு மாலையில் அதை அடைப்பவர்களும் இங்குதான் வாழ்கிறார்கள். கோடிகளில் வங்கியில் கடன் வாங்கிவிட்டு அதை மாதந்தோறும் லட்சங்களில் செலுத்திக் கொண்டிருப்பவர்களும் இங்கேயேதான் வசிக்கிறார்கள்.
தியாகராய நகரில் நடைபாதை வியாபாரிகளும் உண்டு. அடுக்குமாடி ஷோரூம் வணிகர்களும் உண்டு. தலைமுறை தலைமுறையாக ஒரே தொழிலை செய்பவர்களுக்கு இடம் இருப்பது போலவே பருவத்துக்கு ஏற்ப தொழில் செய்யும் தொழில்முனைவோருக்கும் இடமிருக்கிறது.
இவர்கள் அனைவரிடமும் கதை இருக்கிறது. அனைத்துக் கதைகளிலும் அதற்கே உரிய மொழியும் இருக்கிறது. ராயப்பேட்டையின் உரையாடல் அமைப்பு வேறு. பெசண்ட் நகர் குடும்பத்தின் பேச்சு அமைப்பு வேறு. கிடங்குத் தெருவின் வணிக அமைப்பை கோயம்பேடு வியாபாரத்துடன் பொருத்திப் பார்க்க முடியாது.
இவற்றை எல்லாம் விட அனைத்துக்கும் தனித்தனியே திணைகளும் அத்திணைக்கான இலக்கண அமைப்பும் இவற்றின் அடித்தளமாக விளங்கும் பொருளாதார கட்டமைப்பும் இருக்கின்றன. இவையேமுகமாகஜொலிக்கின்றன.
இப்படி ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு முகம் இருக்கிறது. அம்முகத்துக்குப் பின்னால் திணையும்.
என்றாலும் முகத்துக்குள் முகங்களும்; திணைக்குள் திணைகளும் இருக்கும் ஒரே நிலம் / பிரதேசம் சென்னைதான்.
அதற்கான சாட்சிதான்எம்டன் செல்வரத்தினம்: சென்னையர் கதைகள்என்ற இந்த நூல்.
மயிலாப்பூர் டைம்ஸ்மற்றும்கிழக்குப் பதிப்பகம்இணைந்து நடத்தியசென்னை சிறுகதைப் போட்டிக்கு முந்நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் வந்ததும்; ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் இறுதிச் சுற்றுக்கு தேர்வானதும்; ஆறுதல் பரிசுடன் சேர்த்து தேர்வான சிறுகதைகள் இப்போது நூலாக வந்திருப்பதும் இருப்பதும் இதைத்தான் உணர்த்துகிறது.
போட்டியில் பங்கேற்ற அனைவருமேகதையை எழுதவில்லை. மாறாக வேறெந்த ஊருக்கும் / நகருக்கும் பொருந்தாத சென்னைக்கு மட்டுமே உரிய தருணங்களை / கணங்களை / வெடிப்பை பதிவு செய்திருக்கிறார்கள். அதன் வழியே தங்களுக்கானதிணையை நோக்கி நகர்ந்திருந்தார்கள்.
இத்தொகுப்பில் இருக்கும் சிறுகதைகளை படித்தப் பின் நீங்களே ஒப்புக் கொள்வீர்கள்.
சென்னை மாநகரம் மட்டுமல்ல. அதுதிணைகளின் பெருவெளி என்று
 (‘எம்டன் செல்வரத்தினம்: சென்னையர் கதைகள்’, ‘கிழக்கு பதிப்பகம்வெளியீடு. விலை: ரூ.140/-)

No comments:

Post a Comment