‘மெர்சல்’ படத்தை முன்வைத்து சில கருத்துகள்

அச்சம் வேண்டாம். இது ‘மெர்சல்’ விமர்சனம் அல்ல. அப்படத்தை முன்வைத்து சில கருத்துகள் மட்டுமே.
1. எந்த மொழி படத்தில் இருந்தும் கதைக் கருவையோ, காட்சிகளையோ காப்பி அடிப்பதோ அல்லது இன்ஸ்பையர் ஆவதோ தவறில்லை. ஆனால், கட்டடத்தை விட்டுவிட்டு சாரத்தை மட்டுமே கட்டடம் என்று எடுத்துக் கொள்வதோ நினைப்பதோ தவறு.
இயக்குநர் அட்லியும் சரி... திரைக்கதை, வசனத்தில் உடன் பங்காற்றும் (விஜய் டிவி சீரியல் புகழ்) ரமணகிரிவாசனும் சரி... தொடர்ந்து இந்தத் தவறைதான் செய்கிறார்கள். ‘தெறி’யும், ‘மெர்ச’லும் இதற்கு மிகச்சிறந்த உதாரணங்கள்.
2. விஜய்காந்த் நடித்த ‘சத்ரியன்’ படத்தின் சாரம், வில்லனுடன் மோதியதால் தன் மனைவியை பறிகொடுத்த ஏசி, காவல்துறை பணியிலிருந்து விலகி இருப்பதும்; மீண்டும் அதே வில்லனால் அப்பணியில் சேர்ந்து அவரையே வீழ்த்துவதும் மட்டுமே அல்ல.
இது தயிர்வடையில் தூவப்பட்ட பூந்திதான்.
உண்மையில் கட்டடம் வேறு. உறவுகளற்று சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் படிக்கும் சிறுவன், அதே பள்ளியில் வார்டனாக இருக்கும் விஜய்குமாரால் வளர்க்கப்பட்டு ஏசி ஆகிறான். அவரது மகளையே (மறுமொழியில் சிலர் அப்படி அல்ல என்கிறார்கள். செக் செய்ய வேண்டும். எது எப்படி இருந்தாலும் நாம் உரையாடும் விஷயத்துக்கு இது - விஜயகுமாரின் மகளா இல்லையா என்பது - தடையாக இருக்காது) திருமணமும் செய்து கொள்கிறான்.
அதாவது சொந்தபந்தம் இல்லாமல் வளர்பவனுக்கு, உறவுக்காக ஏங்கியவனுக்கு... அவனுக்கே அவனுக்கு என்று சொந்தம் கிடைக்கிறது.
அந்த உறவைத்தான் அவனை விட்டு வில்லன் பிரிக்கிறான். இதனால்தான் விரக்தி அடைந்து வில்லனுடன், தான் மோத காரணமாக இருக்கும் தன் பணியை விட்டு விலகுகிறான்.
அப்படி விலகியவனை வீழ்த்துவதல்ல வில்லனின் நோக்கம். எந்தப் பணியில் இருந்தபடி அதுநாள் வரை தனக்கிருந்த ஆளுமையை ஹீரோ சிதைத்தானோ... அதே பணியில் அதே ஹீரோவை மீண்டும் அமர வைத்து அவனை வீழ்த்த வேண்டும்... அதன் மூலம் சிதைந்த தன் ஆளுமையை மீண்டும் நிலைநிறுத்த வேண்டும் என்பதே வில்லனின் ஆசை, கனவு, லட்சியம்.
இந்த கட்டடம்தான் ‘சத்ரியன்’ படம்.
சுருக்கமாக சொல்வதென்றால் ஹீரோவுக்கும் வில்லனுக்கும் அவரவருக்கான உளவியல் நியாயங்கள் அப்படத்தில் வலுவாகவே உணர்த்தப்பட்டிருக்கும்.
ஆனால், ‘தெறி’யில் விஜய்க்கு பாசமான அம்மா உட்பட சகலமும் உண்டு. சொந்தத்துக்காகவோ உறவுகளுக்காகவோ எந்த கட்டத்திலும் அவர் ஏங்கியதில்லை.
பாசமான அம்மாவும் அன்பான காதல் மனைவியும் கொலை செய்யப்பட்டல் -
கொன்றவர்களை பழி தீர்க்கத்தான் அடுத்த கணம் ஆவேசத்துடன் ஹீரோ புறப்படுவான்.
இதுதான் உளவியல்.
இதற்கு மாறாக ‘தெறி’ திரைக்கதை சென்றது - அதாவது வேலையை விட்டுவிட்டு கண்காணா இடத்துக்கு குழந்தையுடன் செல்வது.
இந்த அபத்தத்தாலேயே வில்லன் Vs ஹீரோ மோதலுக்கான உளவியல் காரணங்களை திரைக்கதையால் பதிவு செய்ய முடியவில்லை. அதனாலேயே ‘வரணும்... பழைய பன்னீர் செல்வமா வரணும்...’ எடுபடவே இல்லை.
3. ‘மெர்சல்’ பிரச்னையும் இதுவேதான்.
கமலின் ‘அபூர்வ சகோதரர்கள்’ வெறும் தந்தையை கொன்றவர்களை மகன் பழி தீர்ப்பதும்; ஒரு மகன் செய்யும் கொலைகள் அவனைப் போலவே உருவ ஒற்றுமைக் கொண்ட இன்னொரு மகன் மீது விழுவதும் மட்டுமே இல்லை.
இது வெறும் சாரம்தான்.
எனில் கட்டடம்?
தன் சர்க்கஸ் முதலாளியின் மகளை அப்பு காதலிக்கிறான். அந்தக் காதல் கைகூடவில்லை. தன் உருவத்தினால்தான் காதலி கிடைக்கவில்லை என தாழ்வுமனப்பான்மையில் அப்பு தவிக்கும்போது -
‘நான் செஞ்ச தப்பு... பாவம்...’ என ப்ளாஷ்பேக்கை அம்மா ஓபன் செய்கிறார். அதாவது, தான் விஷம் குடித்ததாலும் அந்த விஷத்தை வில்லன் கோஷ்டி புகட்டியதாலுமே அப்பு இப்படி குள்ளமாக பிறந்திருக்கிறான் என்கிறார்.
இந்தக் கோபம்தான் - இப்படி, குள்ளமாக, தான் இருப்பதற்கும் காதலி கிடைக்காமல் போனதற்கும் அந்த கும்பல்தான் காரணம் என்ற உண்மை - வில்லன் கோஷ்டியை கொலை செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு அப்புவை கொண்டு செல்கிறது.
இதில் தந்தையை கொன்றவர்களை பழிவாங்குவது என்பது அடிஷனல். மெயின்? அப்புவின் தாழ்வுமனப்பான்மையும், காதல் கை கூடாமல் போவதும்.
அதனால்தான் எந்த உருவத்தால் அதுநாள் வரை, தான் ஏளனம் செய்யப்பட்டோமோ -
அதே உருவத்தை வைத்து தன்னை விட பலசாலிகளை வீழ்த்திக் காட்டும் அளவுக்கு புத்திசாலித்தனமாக அப்புவை செயல்பட வைத்தது.
இதன் மூலம் தன்னை இகழ்ந்தவர்களால் முடியாததை, தான் சாதித்து விட்டோம் என்ற உளவியல் திருப்தி அப்புவுக்கு கிடைத்தது. இறுதிக் காட்சியில் கம்பீரமாக அப்பு சிறைக்கு செல்வது இதன் ஓர் அங்கம்தான்.
இதனால்தான் கமலின் ‘அபூர்வ சகோதரர்கள்’ திரைக்கதையும் காட்சிகளும் இப்போதும் பேசும் பொருளாக இருக்கிறது.
‘மெர்சல்’ படத்தில் இந்த உளவியல் கூறுகள் எல்லாம் மிஸ்ஸிங்.
கமலின் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தின் சாரத்தை மட்டும் - தந்தையை கொன்றவனை மகன் பழிவாங்குவது; ஒரு மகன் செய்யும் கொலைகளின் பழி இன்னொரு மகன் மேல் விழுவது - எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
4. பிற படங்களில் இருந்து கதைக் கருவையும் / காட்சிகளையும் சுட நினைப்பவர்கள்; இன்ஸ்பையர் ஆகி யோசிப்பவர்கள் மேலே சொன்ன உதாரணங்களை மனதில் கொள்வது நல்லது.
5. படங்களுக்கு மட்டுமல்ல. எழுத்துக்கும் இவை பொருந்தும். சிறுபத்திரிகை எழுத்துக்களோ அல்லது வெகுஜன படைப்புகளோ இன்ஸ்பையர் ஆகாத / காப்பி அடிக்காத படைப்பாளிகளே இல்லை.
6. மனதில் கொள்ள வேண்டியது அமரர் கல்கியை. ராமாயண கதையாடல்தான் ‘சிவகாமியின் சபதம்’; மகாபாரத கதையாடல்தான் ‘பொன்னியின் செல்வன்’.
ஆனாலும் ‘சிவகாமியின் சபதம்’; ‘பொன்னியின் செல்வன்’ ஆகியவை இன்றும் பேசப்படுகின்றன; படிக்கப்படுகின்றன.
7. ஸோ, ‘குடியிருந்த கோயில்’ படத்தை மீண்டும் எடுப்பது பிரச்னையில்லை.
ஆனால், அதை கமலின் ‘அபூர்வ சகோதரர்கள்’ போல் உருவாக்க வேண்டும்.
ரகசியம் இவ்வளவுதான்.

No comments:

Post a Comment