Dummies for சார்த்தர்

ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. சார்த்தரின் தத்துவங்கள் காலாவதியாகிவிட்டன... என உரையாடல் நிகழ்ந்து வரும் நேரத்தில் அவரைப் பற்றி ஒரு பதிவு. தெரிதாவும், ஃபூக்கோவும் சார்த்தரின் தத்துவங்களை காயவைத்து, பிழிந்து, கொடியில் உலர்த்தி விட்டதாக கருதப்படும் சூழலில் சார்த்தரை குறித்து ஓர் அறிமுகம்.


இத்தனைக்கும் ஃபூக்கோவை கற்க முயற்சித்து வரும் ப்ரி.கே.ஜி. மாணவன். '20ம் நூற்றாண்டைக் கற்பனை செய்து பார்க்கும் 19ம் நூற்றாண்டு மனிதனால் எழுதப்பட்டது' என சார்த்தர் எழுதிய Critique of Dilaectical Reason (இயங்கியல் அறிவு பற்றிய விமர்சனம்) நூலை குறித்து ஃபூக்கோ சொல்லியிருப்பதை எழுத்துக் கூட்டி படித்திருப்பவன். இதே வாசகங்களை காரல் மார்க்ஸ் குறித்தும் ( எப்படி மீன் தண்ணீரில் வாழும் உயிரினமோ அப்படி மார்க்ஸ் 19ம் நூற்றாண்டு உயிரினம்! - அதாவது 19ம் நூற்றாண்டுக்குப் பின் காரல் மார்க்ஸின் தத்துவம் மறைந்துவிட்டது என்ற பொருளில்) அவர் நக்கலடித்திருப்பதை எப்படி புரிந்து கொள்வது என்று தெரியாமல் திகைத்து நிற்பவன்.

என்றபோதும் சார்த்தர் குறித்து ஒரு பதிவு எழுத வந்திருக்கிறேன்.எதனால்? தெரியவில்லை. 1964ம் ஆண்டு தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை அவர் வாங்க மறுத்தது காரணமாக இருக்கலாம். அல்லது மத்தியதர வர்க்க அறிவு ஜீவியாக அவர் அடையாளம் காணப்பட்டது காரணமாக இருக்கலாம். அல்லது தனது வாழ்நாளிலேயே புகழின் உச்சத்தை தொட்டு, வீழ்ச்சியையும் கண்ட தத்துவவாதியாக இருந்தது காரணமாக இருக்கலாம். அல்லது அவருக்கும் பெண்ணிய எழுத்தாளரும், தத்துவவாதியுமான சிமோன் தெ பூவாருக்கும் இடையில் இருந்த காதல் காரணமாக இருக்கலாம்.

The Nature of Second Sex என்ற நூலை எழுதியவர் சிமோன் தெ பூவார். பெண்ணியம் குறித்தான பைபிள் என இதனை சொல்லலாம். தப்பில்லை. சார்த்தருடன் பல விஷயங்களில் ஒன்றுபட்ட கருத்தை கொண்டுள்ள இவர், சில விஷயங்களில் அவரை எதிர்த்தும் இருக்கிறார். ஆணாதிக்கவாதி என்றுக் கூட சார்த்தவரை விமர்சித்திருக்கிறார்.

என்றாலும், இவர்களது காதலோ, தோழமையோ பாதிக்கப்படவில்லை. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் 'லிவிங் டூ கெதர்' வாழ்க்கை முறையில் இறுதி வரை வாழ்ந்திருக்கிறார்கள். இத்தனைக்கும் இருவருக்கும் வெளியில் ஏகப்பட்ட காதலனும், காதலியும் இருந்திருக்கிறார்கள்.

எந்த தத்துவ மாணவனையும் ஈர்க்கும் வாழ்க்கையல்லவா இது? !

யோசித்துப் பார்க்கும்போது சார்த்தரின் 'இருத்தலியல்' தத்துவமே அவர்பால் கொண்டு சென்றிருக்கிறது என்று தோன்றுகிறது. உதாரணமாக ஃபூக்கோ விமர்சித்துள்ள நூலையே எடுத்துக் கொள்ளுங்கள்... Critique of Dilaectical Reason... அதில் ஓர் இடத்தில் சார்த்தர் சொல்கிறார், 'மனிதனின் சிறப்பியல்பு, எல்லாவற்றுக்கும் மேலாக, அவன் ஒரு சூழ்நிலையைக் கடந்து அதற்கு அப்பால் செல்வதும், அவன் என்னவாக ஆக்கப்பட்டுள்ளானோ அதிலிருந்து அவன் தன்னை உருவாக்கிக் கொள்வதில் வெற்றியடைவதும்தான்...' என்கிறார்.

Being and Nothingness (இருத்தலும் இல்லாமையும்) என்பது சார்த்தர் எழுதிய புகழ்பெற்ற நூல். பலநூறு பக்கங்கள் இருக்கும். உண்மையை சொல்லிவிடுகிறேன். கிரெடிட் கார்டில் அந்த நூலை வாங்கியிருப்பதுடன் சரி. இன்றுவரை அதை முழுமையாக படித்ததில்லை. சார்த்தர் சொல்வதை உள்வாங்க என்னால் முடியவில்லை. சிரமமாக இருக்கிறது. என்னைப் போலவே பலர் இருக்கக் கூடும். அதற்காகவே 1945ம் ஆண்டு Existentialism is a Humanism என்ற தலைப்பில் (இருத்தலியல் என்பது ஒரு மனித தத்துவக்கொள்கை) சொற்பொழிவு நிகழ்த்தினார். பின்னர் அதுவே நூலாகவும் வந்தது. என்னைப் போன்ற முட்டாள்களை மனதில் வைத்து அதில் தனது இருத்தலியல் கொள்கைகளை எளிமையாக விளக்க சார்த்தர் முயற்சித்து இருக்கிறார்!

சமீபத்தில் இந்த நூலை வாசிக்க முடிந்தது. சட்டென உள்ளே போகவும் முடிந்தது. ஆஹா... என வியக்கவும். அடடே என சிலாகிக்கவும்.

கைவிடப்பட்ட நிலை, பதற்றம், மன உளைச்சல்... ஆகியவை மனநோயின், நம்பிக்கை வறட்சியின் வெளிப்பாடுகளல்ல... என பொட்டில் அடித்ததுபோல் சொல்லியிருக்கிறார்.

'கைவிடப்பட்ட நிலை' என்பது கடவுள் என்னும் ஒருவர் இல்லை... அதனால் ஒரு பாதையை தேர்வு செய்து கொள்ளும் கட்டாயத்தில் தனியாக விடப்பட்டிருக்கிறோம்... என்பதுதான்.

அதுபோல் 'பதற்றம்' என்பது நமது செயல்களுக்கு நாம்தான் பொறுப்பேற்க்க வேண்டும் என்னும் உண்மையிலிருந்தும், செயல்படுவது தவிர்க்க இயலாதது என்பதை உணர்வதிலிருந்தும் பிறக்கும் நிலை.

'மன உளைச்சல்' என்பது, நம்மை நாமே சார்ந்திருப்பதை தவிர வேறு வழியில்லை என்பதை உணர்வது...

ம்... அப்புறம்... என சார்த்தருக்குள் ஆழ்ந்தது இதனால்தான்.

ஈடுபாடு... ஈடுபாடு... என்கிறோமே... அப்படி என்றால் என்ன? சார்த்தர் உள்ளேன் ஐயா, என அதற்கு அளிக்கும் விளக்கம் சுவாரஸ்யமானது.

மனித வாழ்வில் அறிவற்ற, அறமற்ற போக்குகளை பார்க்கிறோம். அவற்றுக்கு எதிராக செயல்பட வேண்டியது மனிதனின் கடமை. இல்லாவிட்டால் உலகில் தீமைதான் வெற்றி பெறும். சாவு நமக்காக எப்போதும் காத்துக் கொண்டிருக்கிறது. நாம் செய்யக் கூடிய மிகச் சிறந்த முயற்சிகள் கூட இறுதியில் ஒன்றுமில்லாமல் போகக் கூடும். என்றாலும் முயற்சிகளை நாம் கைவிடக் கூடாது...

இதைதான் ஈடுபாடு என்கிறார் சார்த்தர்.

எல்லாம் கிடக்கட்டும் எக்ஸிஸ்டென்ஷியலிசத்தின் பிதாமகன் சார்த்தர்தானே? என காதை குடைந்தபடி கேட்கக் கூடும். உண்மையில் சார்த்தர் தன்னை இருத்தலியல்வாதி என என்றுமே சொல்லிக் கொண்டதில்லை. ஆனாலும் அவர் மீது அப்படியொரு படிமம் விழுந்துவிட்டது. 'ஒகே. இட்ஸ் ஆல்ரைட்' என அதை அவர் ஏற்றுக் கொண்டார். அவ்வளவுதான். நியாயமாக பார்த்தால் இருத்தலியல் தத்துவம் குறித்து சார்த்தர் பேச ஆரம்பித்ததற்கு காரணம் ஹைடேக்கர். அவரது கருத்தே சார்த்தருக்கு இன்ஸ்பிரேஷன்.

அதென்ன இருத்தலியல்?

பிறப்பில் தொடங்கி இறப்பில் முடிந்துவிடுகிறது மனிதனின் வாழ்க்கை. அப்படியிருக்க இன்னும் முடிந்துவிடாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையையே சார்த்தர் 'இருத்தலியல்' என்கிறார்.

இந்த 'இருத்தல்', 'இறத்தல்' என்ற முடிவுடனேயே முழுமை பெறுகிறது. எனவே 'இருத்தல்' என்பது மனித வாழ்க்கையை பொதுவாக குறிப்பிடவில்லை. முற்றுப் பெறாமல் வாழ்க்கை இன்னும் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது என்பதையே குறிக்கிறது...

சார்த்தர் சொல்லியிருக்கும் விஷயங்கள், நம்மை அலைகழிப்பவை. யோசிக்க வைப்பவை. சாம்பிளுக்கு சில...

பொருள்களும், வாழ்க்கையும் ஏன் இருக்கின்றன என்பதற்கு உறுதியான காரணங்கள் ஏதும் இல்லை. அவை ஏன் அப்படியிருக்கின்றன, ஏன் இப்படி இல்லை... என்பதற்கான விளக்கத்தையும் நம்மால் சொல்ல முடியாது.

நாமும் அப்படித்தான். புவிக் கோளம் தற்செயலாக தோன்றிய ஒன்று. மனித சமுதாயம் சுயேச்சையானது. எனவே இப்போது இருப்பதுபோல் எப்போதும் அது இருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. அதை மாற்றுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. உலகில் நமக்குள்ள நிலையை ஒன்று ஏற்கலாம் அல்லது மறுக்கலாம். அந்த சுதந்திரம் மனிதனுக்கு உள்ளது...

புவி மண்டலம் நம்மை பற்றி கவலைப்படாமல் இருக்கிறது. நமது செயல்களை குறித்த அக்கறை இந்த பேரண்டத்துக்கு இல்லை. முதலாளிக்கும், தொழிலாளிக்கும் ஒரே மாதிரிதான் சூரியன் காய்கிறது. மழை பொழிகிறது. அழிவு என்பது அடிப்படையில் மனிதன் சம்மந்தப்பட்ட விஷயம். பூகம்பம் நடப்பது பூமியின் இயல்பு. அந்த இடத்தில் கட்டப்பட்ட வீடுகள் இடிவதும், மனிதர்கள் பலியாவதும் மனிதனின் விஷயங்கள். உதாரணமாக பூமியில் மனிதனே இல்லாவிட்டால், பூகம்பம் பேரழிவல்ல...

நாம் புற உலகின் அங்கமாக இருக்கலாம். சூழல்களால் உருவாக்கப்பட்ட பொருட்களின் கூட்டத்தில் வசிக்கலாம். எடுத்துக்காட்டாக நாம் அனைவரும் இணையதளங்களில் புழங்கும் ஆட்கள் என்பது கூட்டத்தில் வசிப்பதற்கு சமம்.

இப்படி பொத்தாம் பொதுவாக நினைத்தால் நாம் இன்னும் இருத்தலுக்கான தகுதியை படைத்துக் கொள்ளவில்லை என்று அர்த்தம். இந்த இணையதளம் என்ற சூழ்நிலையை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால், அதிலிருந்து எதை நாம் கைகூடிவர செய்திருக்கிறோம் என்பது முக்கியம். அப்போதுதான் இருத்தலுக்குரிய அசலான மனிதர்களாக வாழ்வோம்.

அதாவது, நமக்கான பிளாக்கில் / முகநூல் பக்கத்தில் நாம் என்ன எழுதுகிறோம் என்பது முக்கியம். அதைவிட முக்கியம் என்ன எழுதவில்லை என்பது! நாம் அசலானவர்களாக இருக்கவேண்டுமானால், தேர்வு செய்யும் செயலை உள்ளடக்கிய சுதந்திரத்தை பயன்படுத்த வேண்டும்...

தனக்கான சுதந்திரத்தை தேர்வு செய்வது மகிழ்ச்சியான ஒன்றல்ல. தான், தனியானவன்; ஆதரவற்றவன் என்பதை உணர்வது யாருக்குமே மகிழ்ச்சியை தராது.

ஒரு மனிதன் மேற்கொள்ளும் அசலான தேர்வு என்பது, அவனுக்கும் பிறருக்கும் மேலும் அதிக சுதந்திரத்தை கொண்டு வருவதே. ஒரு நிலைப்பாட்டை ஒருவன் தேர்வு செய்து கொண்ட பிறகு, அந்த செயலின் முழு பொறுப்பையும் அவன் ஏற்க வேண்டும். தட்டிக் கழிப்பது தனது சுதந்திரத்தை மறுப்பதற்கு சமம்...

இந்த உலகில் இரண்டு விஷயங்கள் உள்ளன. தானாகவே உள்ள பொருள் (Being - in - itself), தனக்காக உள்ள பொருள் (Being - for - itself).

அப்படியானால் இங்கு முழுமுற்றானது என்பது எதுவுமில்லையா?

இருக்கிறது.

தமக்குள் இருக்கும் பொருட்களுக்கும், தமக்காக உள்ள மனிதர்களுக்கும் உள்ள வேறுபாடுதான் அது.

தலையை சுற்றுகிறதா? இப்படி பார்ப்போம். ஒரு காகித துண்டுக்கு, தான் காகித துண்டாக இருக்கும் நிலையை போக்கிக் கொள்ளும் சுதந்திரமில்லை. ஆனால், அந்த காகித துண்டில் எழுதப்பட்ட விஷயங்களை படிப்பதோ, படிக்காமல் விடுவதோ மனிதனுக்குள்ள சுதந்திரம்.

இந்த உலகில் நமது இருத்தல் இருக்கும்வரையில் தேர்வு செய்யும் உரிமையை நாம் பெற்றிருக்கிறோம். இந்த சுதந்திரம் நிழலைப் போல் நம்மை தொடர்ந்துக் கொண்டேயிருக்கிறது...

கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோல் இருக்கிறதா? விஷயம் ஒன்றுமில்லை. சார்த்தர் ஓயாமல் சொல்வது ஒன்றே ஒன்றுதான். மனிதனுக்கு சுதந்திரம் இருக்கிறது. ஒன்று ஏற்பது. அல்லது மறுப்பது.

உதாரணத்துக்கு இந்தப் பதிவையே எடுத்துக் கொள்ளுங்கள். படிப்பதும், படிக்காமல் போவதும் உங்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரம். படித்து 'டிரவுசர் கிழிந்தால்' அதற்கான பொறுப்பை நீங்கள்தான் ஏற்க வேண்டுமே தவிர எழுதிய நானோ, பதிவுக்கு காரணமான சார்த்தரோ அல்ல. இந்தப் பதிவை படிக்காமல் உதாசீனம் செய்வதுக் கூட உங்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரம்தான்.

இறுதியாக... 'மனிதன் என்பவன் இப்போது என்னவாக இல்லையோ அதுதான்; என்னவாக உள்ளானோ அது அல்ல!'

இறுதிக்கு இறுதியாக சார்த்தரின் மாணவர்களாக ஒருவகையில் இருந்தவர்கள்தான் தெரிதாவும், ஃபூக்கோவும் என்பதை இங்கு நினைத்துக் கொள்கிறேன்.

உதவிய நூல்:
சார்த்தர் - விடுதலையின் பாதைகள் : எஸ்.வி. இராஜதுரை, அடையாளம் வெளியீடு

No comments:

Post a Comment